பெரியம்மை தாக்கம்; வடமேல் மாகாணத்தில் கால்நடை கொண்டு வர, செல்ல தடை

- கிளிநொச்சியிலும் தாக்கம் அதிகரிப்பு

வடமேல் மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கால்நடைகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவிவரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ். பெரேரா தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை உத்தியோகத்தர் பிரிவுகளில் 34 கால்நடை உத்தியோகத்தர் பிரிவுகள் பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் வடமத்திய மாகாணம் ஊடாக வடமேல் மாகாணத்திற்கும் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய வைத்தியர் ஜே.ஏ.எஸ். பெரேரா, பசுக்களுக்கு இந்நோய் தாக்கியதன் பின்னர் பால் உற்பத்தி குறைவதோடு இது ஒரு மோசமான நிலைமையாக மாறக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது வடமேல் மாகாண பால் உற்பத்தியையும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நோய் பரவி வருவதால் கால்நடைகள் இறப்பது மிக அதிகமாக இருப்பதாகவும், இந்நோய்க்கு உரிய சிகிச்சை அளித்து கால்நடைகளுக்குத் தேவையான சிகிச்சை அளித்தால், கால்நடைகள் குறுகிய காலத்தில் குணமடையலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கவுள்ளதாக, வைத்தியர் ஜே.ஏ.எஸ். பெரேரா மேலும் தெரிவித்தார்.

மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரிப்பு
வட மேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை  கால்நடை மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட, புண் நீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

சவாரி மாடுகள் இரண்டை வளர்த்து வந்த ஒருவர், அதில்  ஒன்று பெரியம்மை நோய் தாக்கம் காரணமாக  இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் ஏனைய கால்நடை ஒன்றும் கடுமையாக பெரியம்மை நோய்த்தாக்கம் காரணமாக உணவு இன்றி நீர் கூட அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நாளாந்தம்  பெறப்படுகின்ற பாலின் அளவும் குறைந்து காணப்படுவதாக கால்நடை உரிமையாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பலர்  இதனால் பாதிக்கப்படுவதாகவும்  தற்பொழுது கால்நடைகளுக்கான மருந்து வகைகளும்  பல மடங்கு அதிகரித்துகானப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கால்நடைகளை கொள்வனவு செய்து வளர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி நிருபர்


Add new comment

Or log in with...