அமெரிக்க - இந்திய நட்புறவுகளின் அடிப்படையில் இவ்வருடம் முக்கியமானதாக இருக்கும்

- இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்

ஐக்கிய அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நட்புறவுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இவ்வருடம் இருக்கும் என்று இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி, தாம் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கான நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்ததைத் தொடர்ந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, 'எனது முன்னுரிமைகள் மூன்று விடயங்களுக்கு பொருந்தும். அவற்றில் முதன்மையானது எங்கள் மக்களுக்காகவும் உலகிற்காகவும் அமைதியை மேம்படுத்த உதவுவதாகும். அத்தோடு பாரிய சுபீட்சத்தை ஏற்படுத்துவதும் எங்களது மக்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் நெருக்கமாக்குவதும் அவற்றில் அடங்கும். என்றாலும் யுத்தம், காலநிலை மாற்றம் அல்லது பெருந்தொற்று என்பவற்றினால் உலகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மிகவும் அமைதியான உலகத்தை உருவாக்கவும், அமைதி நிலவும் நாடுகளை கட்டியெழுப்பவும், முன்னுதாரணமாகத் திகழவும் எங்களிடம் சக்தி உள்ளது. எங்களுக்கிடையிலான உறவு உலகத்தை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டது' என்றுள்ளார். 

அதேநேரம் ஜி 20 நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இந்திய வகிப்பது தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், 'இந்தியாவின் தலைமைப் பதவிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. வளர்முக மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் முகம் கொடுக்கும் சவால்களுக்கும் இந்தியா முன்னுரிமை அளிப்பது அவசியம். உக்ரைன் மீதான போர் உலக பொருளாதாரத்தைச் சீர்குலைத்து  முன்னேற்றங்களில் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது' என்றும் கூறியுள்ளார். 


Add new comment

Or log in with...