இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை பிரதேசங்களில் டெங்கு அச்சுறுத்தல்!

பாடசாலை சூழலுக்குள் டெங்கு குடம்பிகள்!

இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாணத்தில் 1878 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோய்ப் பிரிவு வைத்திய அதிகாரி கசுன் வீரசூரிய தெரிவித்தார்.

இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் 708 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இந்த வருடத்தில் கேகாலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் 1170 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மரணம் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக எலிக்காய்ச்சல் நோயாளர்கள் 480 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண டெங்கு ஒழிப்பு குழுவின் கூட்டம் இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது இரத்தினபுரி மாவட்ட தோற்று நோய் வைத்திய அதிகாரி கசுன் வீர சூரிய இத்தகவலை வெளியிட்டார்.

இரத்தினபுரி மற்றும் தேகாலை மாவட்டங்கள் இரண்டிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மாகாண பிரதம செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்தார்.

இதுஇவ்விதமிருக்க மாத்தளை நகரப் பிரதேசத்தில் பரிசோதனைக்குட்படுத்திய 10 பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் கடந்த 05 மாத காலத்தில் 616 டெங்கு நோயாளர் இனம்காணப் பட்டிருப்பதாகவும் மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது தகவல்கள் வெளியாகியது.

மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களாகிய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட தலைமையில் இடம்பெற்றது.

மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை, தம்புள்ள, கலேவெல, இறத்தோட்டை, உக்குவளை மற்றும் பல்லேப்பொல வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாகப் பரவி வருவதாகவும்,டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனம்கண்டு அழிக்கப்பட்டு வருவதுடன் டெங்கு நோயைத் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாத்தளை மாவட்ட தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய நிபுணரும் உதவிப் பணிப்பாளருமான டொக்டர் திருமதி எம்.எஸ்.எஸ்.ஸபீயா இதன் போது தெரிவித்தார்.

மாத்தளை மாநகரம் மற்றும் அதனைச் சார்ந்த பிரதேசங்களில் உள்ள பத்து பாடசாலைகளில் மேற் கொள்ளப்பட்ட டெங்கு நுளம்புக் குடம்பிகளைக் கண்டறியும் பொருட்டு பரிசோதனைகளின் போது குறித்த 10 பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகியிருந்தமை தெரியவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பலாங்கொடை தினகரன், தம்புள்ள தினகரன் நிருபர்கள்...


Add new comment

Or log in with...