கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சென்றிருந்த போதிலும், அவர்கள் இருவரும் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களால் கண்டுகொள்ளப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்டாலினும், கமலும் தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். ஆனால் காங்கிரஸின் தேசிய முக்கியஸ்தர்கள் அவ்விருவரின் அருகில் வந்து சம்பிரதாயத்துக்குக் கூட உரையாடிச் செல்லவில்லையென்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூட கமல்ஹாசனை பொருட்படுத்தவில்லையென்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவமானது ஸ்டாலின் மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததைக் காண முடிந்தது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களைக் கைப்பற்றியதையடுத்து ராகுல் காந்திக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது மற்றும் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் மக்கள் நீதி மய்யம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஒரு பொருட்டாகவே கமலை எடுத்துக் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியான செய்தியாகும்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றிக் கொள்ளாத மக்கள் நீதிமய்யத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளவதால் காங்கிரஸுக்கு பயனேதும் இல்லையென்று அதன் தலைவர்கள் கருதுவதாகத் தெரிகின்றது.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் விழா பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. பதவியேற்பு விழாவிற்கு கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசனும் விழாவுக்குச் சென்றிருந்தார். ஆனால் அங்கு வந்திருந்த அரசியல் தலைவர்கள் பலர் கமலை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் கமலுக்கு சற்றுத் தொலைவில் இருந்தபடியே வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றனர். அருகில் வந்து கைகொடுக்கக் கூட இல்லை. இது அரசியல் பார்வையாளர்களால் வித்தியாசமாகக் கவனிக்கப்பட்டது.
காங்கிரஸுடன் கைகோர்ப்பதற்கு கமல் விரும்புகின்றாரே தவிர, கமலை காங்கிரஸில் இணைத்துக் கொள்வதில் அக்கட்சி அக்கறை செலுத்தவில்லையென்பதையே அங்கு காண முடிந்ததாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனால் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலினுடன் தனியாக சிறிது நேரம் பேசியுள்ளார் கமல்ஹாசன். 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க_- காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்து எப்படியாவது எம்.பி வேட்பாளர் ஆசனம் வாங்கிவிட வேண்டும் என்ற குறிக்ேகாளில் கமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இந்த கூட்டணிக்கு அத்திவாரம் இடும் வகையிலேயே காங்கிரஸுடன் கமல் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் அவ்வாறான நெருக்கத்தை கமலுடன் காட்டிக் கொள்ளவில்லை.
இதுஇவ்வாறிருக்க, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தி.மு.க மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் கமல்ஹாசன். பிரசாரங்களில் தி.மு.கவையும் சாடியிருந்தார். ஆனால், இப்போது தி.மு.கவுடன் நெருக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தோல்வியடைந்ததால் வேறு வழியின்றி கமல் தி.மு.க பக்கம் சார்ந்து செல்லத் தொடங்கி விட்டமை தெரிகின்றது.
காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சம்பிரதாயத்துக்குக் கூட கமலுக்கு அருகில் வரவில்லை! தன்னந்தனியனாக அமர்ந்திருந்தவருக்கு ஸ்டாலின் மாத்திரமே கைகொடுத்த பரிதாபம்!
Add new comment