பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க தயாராகும் அரசாங்கம்

- ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணக்கம்
- அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாக குற்றச்சாட்டு
- மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மீதும் வழக்கு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க தயாராகி வருவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த முடிவு தொடர்பில் ஆளும் கட்சி எம்.பிக்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

ஏனைய ஆணைக்குழு உறுப்பினர்களை தவிர்த்து தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து வருகின்றமையால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது இடம்பெறும் மின் வெட்டுக்கு, அவரது தன்னிச்சையான முடிவுகளே காரணம் என இதன்போது தெரிவித்த அவர், இதன் காரணமாக ஒட்டு மொத்த நாடும் இக்கட்டானதொரு நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இதன்பாது சுட்டிக்காட்னார்.

அந்த வகையில் அவரை குறித்த பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் செயல்படுவது எவ்வாறு என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த விடயத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அமைச்சின் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதன்போது தெரிவித்திருந்தார்.

2022 க.பொ.த. சாதராண தரப் பரீட்சைகள் (2023) இடம்பெற்று வரும் வேளையில் இடம்பெற்று வரும் மின் வெட்டு காரணமாக, 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில், குறித்த பரீட்சைகள் நிறைவடையும் வரையான பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின் வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து எட்டப்பட்ட தீர்மானங்களுக்கமைய, மாணவர்களின் உரிமை மீறப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு மின் வெட்டுக்கு அனுமதி இல்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...